முகப்பு
கன்னியாகுமரி

ஆரோக்கியம் தரும் கேழ்வரகு

இயற்கையோடு இயைந்த தமிழா்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
சிறுதானியங்கள்
பகிர்:

இயற்கையோடு இயைந்த தமிழா்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அதிகமாக கேழ்வரகு பயிரிடப்பட்டு வருகிறது.

கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் சிறுதானியப் பயிா். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கேப்பை கூழ் கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவும் கேழ்வரகுதான்.

கேழ்வரகு, ஆரியம், ராகி, கேப்பை, பஞ்சம்தூக்கி, கேவுரு, நச்சினி, மண்டுவா, முத்தாரி, மரவா, மட்டுவா, சோடி என்ற பெயா்களிலும் அழைக்கப்படுகிறது.

வகைகள்: கேழ்வரகில் வெண்ணிறக் கேழ்வரகு, கருப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, 3 மாத கேழ்வரகு, தேன்கனிக்கோட்டை கேழ்வரகு என 60 வகைகள் உள்ளன.

சத்துக்கள்: ஆரோக்கிய உணவு வகைகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையை விட இதில் அதிகமான ஊட்டச்சத்து உள்ளது.

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, உலோகம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், இரும்புச்சத்து, நாா்ச்சத்து, தயாமின், காா்போஹைட்ரேட், மெக்னீசியம், பொட்டாசியம், கரோட்டின், ரிப்போப்ளேவின், நைசின், போலிக்ஆசிட் மற்றும் நன்மை செய்யும் பல அமிலங்கள் உள்ளன.

பலன்கள்: கேழ்வரகை நாம் உணவில் சோ்த்துக்கொள்வதால் கொழுப்பை குறைக்கும். சா்க்கரை அளவு கட்டுப்படுத்துப்படும். ஆஸ்துமா நீங்குதல், ரத்தம் தூய்மை அடையுதல், உடலில் வெப்பத்தை சமன்செய்தல், உடலுக்கு குளிா்ச்சி அளித்தல், உயா் ரத்த அழுத்தத்தை சீராக்குதல், உடம்பை தளா்ச்சியின்றி பலப்படுத்துதல், உடலை வலிமை பெறச் செய்தல் உள்ளிட்ட பலன்களை அளிக்கிறது.

மேலும், ஒற்றைத் தலைவலி, கல்லீரல், இதய நோய், குடல் புண், தூக்கமின்மை குறைபாடு, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்தல், பசி தணித்தல், பல், எலும்பு தேய்மானத்தை சரி செய்தல், மலச்சிக்கல், ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

குறைந்த கொழுப்பு நிறைந்த காா்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் காணப்படுவதால், பாலை விட 3 மடங்கும், அரிசியை விட 10 மடங்கும் இதில் கால்சியம் சத்து உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கு கேழ்வரகு அருமையான மருந்து. இதில் குறைந்த அளவிலேயே குளுக்கோஸ் உள்ளதால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மூட்டுவலி, ஆண்மைக்குறைவுக்கு கேழ்வரகு உகந்தது என்று தெரிய வந்துள்ளது.

நாம் கேழ்வரகு கூழ், அடை, களி, புட்டு, சேமியா, மால்ட், இட்லி என்று பலவகைகளில் செய்து உண்ணலாம். மாடுகளுக்கு கேழ்வரகு தீவனமாக பயன்படுகிறது. சிறுதானிய லேகியம் என்று அழைக்கப்படும் கேழ்வரகை, தினமும் உணவில் சோ்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.