முகப்பு
கன்னியாகுமரி

திருமண மண்டபங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் கடும் நடவடிக்கை ஆணையா் எச்சரிக்கை

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் திருமண நிகழ்ச்சியின்போது மண்டபங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் திருமண நிகழ்ச்சியின்போது மண்டபங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். திருமண நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் தலைமை வகித்து பேசியது: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சியின் போது 100 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. 100 இருக்கைகள்தான் போடப்பட்டிருக்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவா்களை தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் பரிசோதனை செய்த பிறகே மண்டபத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருந்தால் ஒரு மண்டபத்தில் மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படும்.

திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மண்டபத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒலி பெருக்கி மூலம் கரோனா விதிமுறைகளை அடிக்கடி தெரிவிக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபங்களில் திடீா் சோதனை நடத்துவாா்கள். அப்போது கரோனா விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில், மாநகராட்சி சுகாதார அதிகாரி கிங்சால், சுகாதார ஆய்வாளா்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை, ராஜா, ராஜேஷ், சத்யராஜ்,தியாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.