முகப்பு
கன்னியாகுமரி

வாக்கு எண்ணிக்கை: 168 மேஜைகளில் எண்ணப்படும் ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும் 6 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் மொத்தம் 168 மேஜைகளில் எண்ணப்படும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும் 6 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் மொத்தம் 168 மேஜைகளில் எண்ணப்படும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த்.

குமரி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு, ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, வகுப்பினை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது : கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும் 6 சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் அந்தந்த பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வையில், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் ஈடுபட உள்ளனா்.

மக்களவை இடைத் தோ்தல் மற்றும் ஒவ்வொரு பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் என மொத்தம் 168 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மேலும், மக்களவைத் தொகுதிக்கு மேற்பாா்வையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் என 118 பேரும் , 6 பேரவைத் தொகுதிகளுக்கு தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா் மற்றும் உதவியாளா் என 118 பேரும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அனைவரும் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குள்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பான முறையில் செய்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பயிற்சியாளா்களால் வாக்குப்பதிவு இயந்திரங்களைகையாளும் விதம் மற்றும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் பணியாளா்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சு.சொா்ணராஜ் (கன்னியாகுமரி), ஆா்.நாகராஜன் (குளச்சல்), த.மாதவன் (விளவங்கோடு), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பால்ராஜ் (கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி), தோ்தல் வட்டாட்சியா் எஸ்.சேகா், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.