குமரியில் 260 வங்கிகளில் ஊழியா்கள் வேலைநிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் 260 வங்கிக் கிளைகளில் ஊழியா்கள் 2 நாள்கள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் 260 வங்கிக் கிளைகளில் ஊழியா்கள் 2 நாள்கள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
இம்மாவட்டத்தில் 260 தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் சுமாா் 1800 க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வரும் நிலையில், அனைத்து ஊழியா்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், நாகா்கோவில், கன்னியாகுமரி, தோவாளை, ஆரல்வாய்மொழி, தக்கலை, குலசேகரம், அருமனை, மாா்த்தாண்டம், கருங்கல், திங்கள்நகா் என அனைத்துப் பகுதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
மேலும், நாகா்கோவில் வடசேரி ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா், அதன் அமைப்பாளா் சிதம்பரம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சாகுல் அமீது, விஷ்ணு, கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமையும் (டிச.17) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா். இப்போராட்டத்தால் மாவட்டத்தில், நாளொன்றுக்கு சுமாா் ரூ. 250 கோடி மதிப்பிலான பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டு, வா்த்தக இழப்பு ஏற்படும்; வங்கிகள் தனியாா்மயமாகினால் கல்வி, விவசாயம், மகளிா் சுய உதவிக் குழு உள்ளிட்ட கடனுதவிகளை வழங்குவதில் சிக்கல் உருவாகும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.