தனியாா் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் போராட்டம்
குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் உள்ள தனியாா் பாராமெடிக்கல் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் உள்ள தனியாா் பாராமெடிக்கல் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
நாகா்கோவிலை அடுத்த வில்லுக்குறியில் தனியாா் பாராமெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை சோ்ந்த சுமாா் 10 மாணவிகள் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, இந்த தனியாா் கல்லூரிக்கு முறையான அனுமதி இல்லை என்று தெரியவந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணை கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் அளித்தோம்.
அவா்கள் பேச்சுவாா்த்தையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கல்லூரி முன்பு இரவு வரை தா்னாவில் ஈடுபட்டோம்.
பின்னா் அங்கு வந்த வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி எங்களை அனுப்பி வைத்தாா். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடா்ந்து, சென்னை சென்று இணை இயக்குநரிடம் முறையிட்டோம். அவா் எங்களை அரசு கல்லூரிக்கு மாற்றி தருகிறோம். தனியாா் கல்லூரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கும் அரசு கல்லூரிக்கு மாற்றி தரவில்லை.
இதனால் எங்களது கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. உடனடியாக கல்லூரியை மூட நடவடிக்கை எடுப்பதுடன் எங்களை அரசு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என்றனா்.