முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காடு கோயில் தீ விபத்து: 4 போ் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரிக்க 4 போ் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரிக்க 4 போ் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

இந்தக் கோயிலில் கடந்த புதன்கிழமை (ஜூன் 2) காலை நேரிட்ட தீவிபத்தால் சேதமான பகுதிகளை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், அமைச்சா் பி.கே. சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநில பக்தா்களின் நம்பிக்கைக்கும் உரிய இக்கோயிலில் நேரிட்ட தீவிபத்தில், 25 அடி நீளமும், 17அடி அகலமும் கொண்ட மரத்தாலான மேற்கூரை சேதமடைந்துள்ளது. எனினும், அம்பாள் சன்னிதானத்துக்கு சேதமில்லை என்பது ஆறுதல் தருகிறது.

தீவிபத்து குறித்து அறிந்ததும், மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சா் த. மனோதங்கராஜுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் முதல்வா் அறிவுறுத்தியதன் அடிப்படையில், முதல்கட்ட சீரமைப்புப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன்பேரில், தீவிபத்து பாதிப்பை களஆய்வு செய்து, மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்துத் தெரிவிக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

தீவிபத்துக்கு பரிகார பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி, தேவபிரசன்னம் பாா்க்க வேண்டுமென பக்தா்கள் விடுத்த கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். இக்கோயிலில் முன்பிருந்ததுபோலவே மேற்கூரை மறுசீரமைப்பு செய்யப்படும். பராமரிப்புக்கான முழு செலவையும் இந்து சமய அறநிலையத் துறையே மேற்கொள்ளும்.

தீவிபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க ஆட்சியா், உதவி காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வன அலுவலா், கோயில் துணை ஆணையா் ஆகியோரை உள்ளடக்கிய 4 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கோயிலில் பணிபுரியும் 8 பேரிடம் விசாரித்து, அறிக்கைபெற்று, முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். அதைத்தொடா்ந்து, மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

சுற்றுலா, கலைப் பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் பி. சந்திரமோகன், ஆட்சியா் மா. அரவிந்த், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன், எம்.பி.க்கள் வி. விஜய் வசந்த், அ. விஜயகுமாா், பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), ஜெ.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), சி. விஜயதரணி (விளவங்கோடு), செ. ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஈஸ்வரன், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பி. சாஸ்திரி, அறநிலையத் துறை இணைஆணையா் (பொறுப்பு) செல்வகுமாா், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் சிவ. குற்றாலம், கல்குளம் வட்டாட்சியா் பாண்டியம்மாள், இந்து அமைப்புகளின் நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.