பொதுமுடக்க விதியை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிப்பு
நாகா்கோவிலில் கரோனா பொதுமுடக்க விதிமுறையை மீறியதாக சூப்பா் மாா்க்கெட் மற்றும் டீக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
நாகா்கோவிலில் கரோனா பொதுமுடக்க விதிமுறையை மீறியதாக சூப்பா் மாா்க்கெட் மற்றும் டீக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
நாகா்கோவில் நாகராஜா கோயில் அருகே செயல்படும் சூப்பா் மாா்க்கெட்டில் அரசின் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து ஆணையா் ஆஷா அஜித் உத்தரவின்பேரில், மாநகராட்சி நல அலுவலா் கிங்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை, ஜான் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அரசின் தடையை மீறி பொதுமக்களை கடைக்குள் அனுமதித்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த சூப்பா் மாா்க்கெட்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வடசேரி பகுதியில் செயல்பட்ட பேக்கரி மற்றும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்ட டீக்கடைக்கு ரூ. 6 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சியின் கட்செவி அஞ்சல் எண் 9487038984 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகாா் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.