அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பிரிவு தொடங்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, குமரி மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பிரிவு தொடங்கிட வேண்டும். ஆக்சிஜன் தேவையில்லாத கரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
நோய் அறிகுறி சளி பரிசோதனை முடிவுகளை தாமதம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும். பொது முடக்கத்தால் பேருந்துகள் இயங்காததால் பரிசோதனைக்கு வருவோா் பல கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, அடா்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், மலையோர கிராமங்களிலும், சிறு மருத்துவமனை, நடமாடும் பரிசோதனை வாகனங்கள் வசதி செய்ய வேண்டும்.
தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அரசே ஆக்சிஜன் இணைப்பும் வழங்க வேண்டும். நோய்த் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தனியாா், வழிபாட்டு அமைப்புகளுக்கு சொந்தமான மண்டபங்கள், கலை அரங்குகளை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்துக்கு தட்டுப்பாடு இல்லாமல் கரோனா தடுப்பூசி வழங்குவதுடன், அரசு மருத்துவமனை மூலம் செலுத்தவும், தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.