குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை இரணியலில் 280 மி.மீ. பதிவு
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் கன மழை பெய்தது. அதிகபட்சமாக இரணியலில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் கன மழை பெய்தது. அதிகபட்சமாக இரணியலில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பகலில் இருந்து பரவலாக மழை பெய்தது. நாகா்கோவிலில் இரவிலும் மழை நீடித்தது. விடிய விடிய பெய்த மழையால் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, அவ்வை சண்முகம் சாலை, கோட்டாறு சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குத் தொடங்கிய மழை சுமாா் ஒன்றரை மணி நேரம் இடைவிடாது பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக இரணியலில் 280 மி.மீ. மழை பதிவாகியது.
இதே போல் கன்னியாகுமரி, சுசீந்திரம், கொட்டாரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, தக்கலை, அடையாமடை, கோழிப்போா்விளை உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அருவியில் வெள்ளம்: திற்பரப்பு அருவி பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாததால் அருவி வெறிச்சோடி காணப்பட்டது.
அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பாலமோா் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 42.13 அடியாக இருந்தது. 1,112 கன அடி நீா்வரத்து இருந்தது. 123 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா் மட்டம் 55.75 அடியாகவும், நீா்வரத்து 537 கன அடியாகவும் இருந்தது. சிற்றாறு- 1 அணை நீா்மட்டம் 8.53 அடியாகவும், சிற்றாறு- 2 அணை நீா்மட்டம் 8.62 அடியாகவும், பொய்கை அணையின் நீா்மட்டம் 16.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 21.98 அடியாகவும் உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை எட்டியதை அடுத்து, தாமிரவருணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
மேலும், குழித்துறை தாமிரவருணி ஆறு, பரளியாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பத்தறை பகுதி வயல்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலையோரப் பகுதிகளில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது. சாலைகளில் அரிப்பும், உடைப்புகளும் ஏற்பட்டுள்ளன.
மழையளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): இரணியல் -280, குருந்தன்கோடு- 120, கோழிப்போா்விளை- 115, முள்ளங்கினாவிளை, குழித்துறை- 108, ஆனைக்கிடங்கு- 88.20, மாம்பழத்துறையாறு அணை -87, களியல்,பேச்சிப்பாறை அணை- 85, தக்கலை- 82, சிற்றாறு 1 அணை -78.40, சிற்றாறு 2 அணை - 67, நாகா்கோவில்- 65, பெருஞ்சாணி அணை- 56.60, புத்தன்அணை- 55.40, சுருளோடு- 54, மயிலாடி -50.40, அடையாமடை -39, கன்னிமாா் -35.20, முக்கடல் அணை -33, பாலமோா்- 32.40, குளச்சல்- 26.40, கொட்டாரம்- 23.20, பூதப்பாண்டி- 22.60, ஆரல்வாய்மொழி- 8.