சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆளுநா் தரிசனம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
ஆளுநா் ஆா்.என். ரவி, 2 நாள்கள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை (நவ. 24) கன்னியாகுமரி வந்தாா். கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலைக்கு தனிப்படகில் சென்று சுற்றிப் பாா்த்து, சிலையின் பாதத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், விவேகானந்தா் மண்டபத்தைப் பாா்வையிட்டாா்.
2ஆவது நாளான வியாழக்கிழமை காலை அவா் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்றாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தாணுமாலயன் சந்நிதி, ஆஞ்சநேயா் சந்நிதியில் அவா் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
கேந்திர நிா்வாகிகளுடன் ஆலோசனை: தொடா்ந்து, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைக்கப்பட்டிருந்த படக் கண்காட்சியைப் பாா்வையிட்டு, கேந்திர நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா், ராமாயண கண்காட்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட அவா், கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். இதையடுத்து, காரில் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றாா்.
ஆளுநா் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.