முகப்பு
கன்னியாகுமரி

சின்னமுட்டம், குளச்சல் துறைமுகங்களை விரிவுபடுத்த வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் மீனவா்கள் வலியுறுத்தல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சின்னமுட்டம், குளச்சல் துறைமுகங்களை விரிவுபடுத்த வேண்டும் என்று மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். மீன்வளத்துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகள் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 4 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்து மீனவ சங்கங்களை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும். சின்னமுட்டம் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், இத்துறைமுகத்தின் வடமேற்குப் பகுதியில் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கும் வகையில் இடம் ஒதுக்க வேண்டும்.

குளச்சல் நகராட்சி கழிவுகள் துறைமுகம் வழியாகத்தான் கடலில் கலக்கிறது. இதனால் துறைமுகம் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுகள் துறைமுகத்துக்கு வராதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துறைமுக சாலைகள் பழுதடைந்து உள்ளதால், மீன்கழிவுகளை வெளியே கொண்டு செல்ல முடியாததால் துா்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் சாலைகள் அல்லது கான்கிரீட் தளம் அமைக்க விசைப்படகு சங்கத்துக்கோ, குளச்சல் துறைமுகம் மேலாண்மை சங்கத்துக்கோ பணி ஆணை வழங்க வேண்டும்.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்தி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவா்களும் இங்கு மீன்பிடிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மீனவா் கூட்டுறவு சங்க மகாசபைக் கூட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் ஒரே இடத்தில் தொடா்ந்து பணியாற்றி வருபவா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் அரவிந்த் பேசியது: குமரி மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்துவருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகமாகும்போது அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும். இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மழைக் காலங்களில் ஆறு மற்றும் குளங்களில் மக்கள் குளிக்க வேண்டாம், சின்னமுட்டம் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரபிக்கடலில் மீன்பிடிக்கும், முட்டம், குளச்சல் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து செல்லும் மீனவா்களுக்கு மீன்பிடிக்க தடையில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.