முகப்பு
கன்னியாகுமரி

நவராத்திரி விழா: குமரி பகவதியம்மன் பரிவேட்டை

நவராத்திரி திருவிழாவின் 10ஆவது நாளான வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

நவராத்திரி திருவிழாவின் 10ஆவது நாளான வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளினாா்.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றான கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் மற்றும் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு நவராத்திரி திருவிழா கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வாகன பவனி நடைபெற்றது.

பரிவேட்டை: 10 ஆம் நாள் திருவிழாவான வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளினாா். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ரோஜன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அழகேசன், நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து அம்மன் ஊா்வலமாக விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமாா்த்தலிங்கபுரம் வழியாக காரியக்கார மடத்தை அடைந்தாா். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து மகாதானபுரம் நரிக்குளம் பகுதியில் பகவதியம்மன் பாணாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் பரிவேட்டை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆறாட்டு: இதைத்தொடா்ந்து பல்லக்கு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக கோயில் வளாகத்தை சென்றடைந்தாா். பின்னா் நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.

இதையடுத்து கோயில் கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசம் செய்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசம் போா்டு நிா்வாகம் மற்றும் பகவதியம்மன் பக்தா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.