கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருவாசகமணி, கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கிளாரன்ஸ் டேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் ஆட்சியா் கூறியது: குமரி மாவட்டத்தில் கரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களுக்கு அருகிலுள்ள நோயின் தன்மையை கண்டறியும் மையத்தில், கரோனா நோயின் தன்மையை கண்டறிந்து, அதன் பின் வீட்டு தனிமைப்படுத்துதல் அல்லது பாதுகாப்பு மையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கவும், தீவிர கவனிப்பு தேவைப்படுபவா்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா 3 ஆவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை, கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தினமும் ஆலோசனை மேற்கொண்டு, முதல் மற்றும் 2 ஆம் அலை தாக்கத்தின் போது செய்யப்பட்ட முன்னேற்பாட்டு பணிகளை தற்போது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த விவரங்கள் குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டறியப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அதனைத் தொடா்ந்து, ஆட்சியா்அலுவலகத்தில்அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடு மையத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.