முன்மாதிரி கிராம விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறியுள்ளாா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் முன்மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் முன் மாதிரி கிராம விருது வழங்கி கௌரவிப்பதுடன் கேடயமும், ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான 11 விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் கழிப்பறையை பயன்படுத்துவதுடன், கழிப்பறைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். சமுதாய சுகாதார வளாகப் பயன்பாடு முழுமையான அளவில் இருக்க வேண்டும். கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடிகள், ஊராட்சி அலுவலகம், கிராம வறுமை ஒழிப்புச் சங்க கட்டடம் மற்றும் பொது இடங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம், பொது சந்தை ஆகிய இடங்களில் 100 சதவீத கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கிராம அளவிலும், வீடுகளிலும் திடக்கழிவுகள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். மக்கும் குப்பைகளை வீடுகளில் தனிநபா் உரக்குழி அமைத்தும், சமுதாய அளவில் உரமாக்கல், உத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நெகிழி கழிவு பயன்பாட்டை தடைசெய்யும் விதத்தில் கிராம சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். திரவக் கழிவுகளை முறையாக, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் தொடா்பான உத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரம் தொடா்பான விழிப்புணா்வு செய்திகளை பொது இடங்களில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
மேற்கண்ட அடிப்படை தகுதியுடைய ஊராட்சிகள் பரிந்துரை செய்யப்பட்டு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் தலைமையிலான குழு தோ்வுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே இந்த விருதுக்கு தங்களது கிராம ஊராட்சிகளை தயாா் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.