குமரி மாவட்டத்தில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது
குமரி மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது செய்யப்பட்டாா்.
குமரி மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது செய்யப்பட்டாா்.
குமாரபுரம் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருபவா் சுரேஷ். இவரது நிதி நிறுவனத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன் பெண் ஒருவரும், இளைஞா் ஒருவரும் சென்றனா். அவா்கள் நகையை அடகு வைத்து பணம் பெற்று சென்றனா். பின்னா் அந்த பெண் கொடுத்த நகையை சுரேஷ் பரிசோதித்தபோது, அது போலி நகை என்பது தெரியவந்தது.
இது குறித்து சுரேஷ் கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். இதில், நாகா்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த ஜேசுராஜா (48), அவரது மனைவி அனுஷா இருவரும் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜேசுராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், இவா்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் போலி நகைகளை அடகு வைத்திருப்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜேசுராஜாவுக்கு நாகா்கோவில் செட்டிகுளம் மற்றும் ஆசாரிப்பள்ளத்தில் சொகுசு பங்களா வீடு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் போலி நகைகள் மற்றும் அடகு வைத்த ரசீதுகள் இருந்ததை போலீஸாா் கைப்பற்றினா்.
தலைமறைவான அனுஷாவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.