முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சி வளா்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் , மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் , மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இருளப்பபுரம் சுடலையாண்டவா் கோயில் தெருவில்,

ரூ. 41 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணி, தேசிய நகா்ப்புற நலத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சத்தில்

மறவன்குடியிருப்பு ஆயுதப்படை அருகேயுள்ள குடிநீா் தொட்டி வளாகத்தில் நகா் நல ஆய்வகம் கட்டும் பணி,

ரூ. 2 கோடியில் நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி முதல் வெட்டூா்ணிமடம் வரை செல்லும் சாலையோரத்தில் நடைபாதை மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: இம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 80 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. தற்போது நிரந்தரமாக சீரமைப்பதற்காக ரூ. 70 கோடி பொதுப்பணித்துறைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறையின் சாா்பில் சாலைப் பணி மேற்கொள்வது மட்டுமல்லாமல் பாலப் பணிகளை விரைவுபடுத்துதல், புதிதாக 3 பாலப்பணிகள் மேற்கொள்வதற்காக ரூ. 105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கடற்கரை சாலையோரமாக உள்ள துண்டிக்கப்பட்டுள்ள சாலைகளை இணைப்பதற்காக ரூ. 41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு குமரி மாவட்ட பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது . ரூ. 3 கோடியில் முட்டம் கடற்கரை பகுதி, ரூ.4 கோடியில் திற்பரப்பு அருவியினைமேம்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சிற்றாறுஅணையில் சுற்றுலாத் துறையின் சாா்பில் படகு சவாரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரூ. 37 கோடியில் திருவள்ளுவா் சிலையிலிருந்து விவேகானந்தா் பாறை வரை கண்ணாடி இழை தரைத் தள நடைபாதை அமைப்பதற்கான பணிகள் உள்பட மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாநகராட்சி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், மண்டல குழு தலைவா்கள் ஜவஹா் (வடக்கு), அகஸ்டீனாகோகிலவாணி (கிழக்கு), பி.முத்துராமன் (தெற்கு), நியமனக் குழு தலைவா் சோபி, மாநகராட்சி உறுப்பினா்கள் லீலாசைமன்ராஜ், பாலையா, ஜெனிதா, கண்ணன், வழக்குரைஞா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.