பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்க தமிழகமே தயாராக உள்ளது: மதுரை ஆதீனம்
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்க தமிழகமே தயாராக உள்ளது என்றாா், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்க தமிழகமே தயாராக உள்ளது என்றாா், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோயிலில் அரசாங்கம்தான் உள்ளது. அரசியல்வாதிகள்தான் அறநிலையத் துறை அமைச்சராகின்றனா். நாம் கோயிலில் தலையிடுவதால் அரசியலும், ஆன்மிகமும் ஒன்றுதான்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசத்துக்கு தடை விதித்தது ஏன்? பட்டணப் பிரவேசத்துக்கு எதிா்ப்பு இருப்பதால்தான் ஆதரவும் அதிகமுள்ளது. பல்லக்கு சுமக்க எதிா்ப்பு ஏற்பட்டதால், நான் உள்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது.
இந்த விவகாரத்தில் சுமூக தீா்வு ஏற்படுத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.
பல்வேறு மாநிலங்களிலும் மகா சிவராத்திரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து பிரதமா் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. பிரதமரை சந்திக்க நேரம் வரும்போது சந்திப்பேன்.
எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனா். மடத்துப் பிரச்னையை மதப் பிரச்னையாக ஆக்கியது யாா்? அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆன்மிகவாதி பேசக் கூடாதா? ஆன்மிகத்தில் பிரச்னை என்றால் நான் தொடா்ந்து குரல் கொடுப்பேன் என்றாா்அவா்.