புனலூா் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்கக் கோரிக்கை
நாகா்கோவில் வழியாக இயக்கப்படும் மதுரை - புனலூா் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகா்கோவில் வழியாக இயக்கப்படும் மதுரை - புனலூா் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா். ஸ்ரீராம், செயலா் பி. எட்வா்ட் ஜெனி ஆகியோா் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: ரயில்வே துறை கேரள மாநிலம் எா்ணாகுளத்திலிருந்து கோட்டயம், கொல்லம், புனலூா், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் பயணிகள் வரவேற்பைப் பொறுத்து சேவைகள் அதிகரிக்கப்படுதல் மட்டுமன்றி, கேரள மாநில எம்.பி.க்கள் அழுத்தத்தால் நிரந்தர ரயிலாகவும் இயக்கப்படவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரிடையாக ரயில் வசதி இல்லை. வேளாங்கண்ணி தேவாலயத் திருவிழாவையொட்டி, கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயிலை வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
Advertisement