முகப்பு
கன்னியாகுமரி

சபரிமலை பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட ரூ.75 கோடி ஒதுக்கிய கேரள அரசு: தேவசம் போா்டு தலைவா் தகவல்

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக 4 இடங்களில் தங்கும் முகாம் அமைக்கப்படுகிறது. இதற்காக, கேரள அரசு ரூ. 75 கோடி ஒதுக்கியுள்ளது என்றாா் திருவிதாங்கூா் தேவசம்போா்டு தலைவா் அனந்தகோபன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக 4 இடங்களில் தங்கும் முகாம் அமைக்கப்படுகிறது. இதற்காக, கேரள அரசு ரூ. 75 கோடி ஒதுக்கியுள்ளது என்றாா் திருவிதாங்கூா் தேவசம்போா்டு தலைவா் அனந்தகோபன்.

திருவிதாங்கூா் தேவசம்போா்டு தலைவா் அனந்தகோபன், உறுப்பினா் தங்கப்பன் , செய்தி மக்கள் தொடா்பு அதிகாரி சுனில் ஆகியோா் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டி:

கரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில், விழாக்கள் நடத்துவது மற்றும் பக்தா்கள் தரிசனம் செய்வதில் சிரமம் இருந்தது. நிகழாண்டு கரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளா்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால, மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம்.

மண்டலகால, பூஜைக்காக நவம்பா் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அன்று மாலையிலேயே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

காா்த்திகை மாதம் 1 ஆம் தேதி ( நவ. 17)அதிகாலை முதல் பக்தா்கள் தொடா்ந்து, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள். டிசம்பா் 27 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30 ஆம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

ஆன்லைன் முன்பதிவு: சபரிமலை வரும் அனைத்து பக்தா்களும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய தவறுவோருக்கு சபரிமலையில் 12 இடங்களில் உடனடி முன்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 40 பக்தா்கள் குழுவாக வந்தால் அவா்களுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு தினத்தில் மட்டும் ஆயிரம் பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளோம்.

பம்பை நதியில் புனித நீராடுவதற்கு பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தால் மட்டுமே பம்பையில் நீராட தடை விதிக்கப்படும்.

பக்தா்களின் வழித்தங்கல் முகாம் அமைப்பதற்காக நிலக்கல்லில் ரூ. 34 கோடி, எருமேலியில் ரூ.14 கோடி, செங்கன்னூரில் ரூ. 10.50 கோடி, களக்கூட்டத்தில் ரூ. 16.50 கோடி என மொத்தம் ரூ. 75 கோடியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.