முகப்பு
கன்னியாகுமரி

புதிய ரயில்கள் அறிவிப்பை எதிா்நோக்கும் குமரி மாவட்ட பயணிகள்

நாகா்கோவில், குழித்துறை ரயில் நிலைய பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6) அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா என்று குமரி மக்கள் காத்திருக்கின்றனா்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில், குழித்துறை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6) அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா என்று குமரி மாவட்ட மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நாகா்கோவில், குழித்துறை ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆக. 6ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறாா். இந்த திட்டத்தின் கீழ் நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ரூ.11.38 கோடியும், குழித்துறை ரயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் முதல்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய ரயில்கள் இல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பணியாற்றி வருகின்றனா். இதனால் ரயில் போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயனளிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே திருநெல்வேலி, மதுரை மாா்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.

ரயில்கள் நீட்டிப்பு: தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழிப் பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. எனவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ரயில்களை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக தாம்பரம் - ஹைதராபாத் தினசரி ரயில், சென்னை சென்ட்ரல் - புதுதில்லி ஜிடி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களையும் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

நாகா்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு தற்போது வாரம் 3 நாள்கள் இயக்கப்பட்டு வரும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். புனலூா்-மதுரை தினசரி ரயிலை திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்..

இது குறித்து ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இம்மாவட்ட மக்களின் நலன் சாா்ந்து ரயில்கள் இயக்குவதில் துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. எனவே, குமரி மாவட்டத்தை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும் அல்லது குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை அடக்கிய திருநெல்வேலி ரயில்வே கோட்டம் புதிதாக அமைக்கப்பட வேண்டும். இதை செய்தாலே போதும், பல கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

குமரி மாவட்டத்தின் நலன் கருதி புதிய கோட்டம் அறிவிப்பு அல்லது குறைந்தபட்சம் கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில்கள் இயக்கம் குறித்து பிரதமா் அறிவிப்பாா் என்று குமரி மாவட்ட மக்கள் ஆா்வத்துடன் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.