முகப்பு
கன்னியாகுமரி

அண்ணா பேருந்து நிலைய விரிவாக்கப் பணி: மேயா் விளக்கம்

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக விரைவுப் போக்குவரத்து கழக பணிமனையை கையகப்படுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக விரைவுப் போக்குவரத்து கழக பணிமனையை கையகப்படுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் மாமன்ற சாதாரண கூட்டம், மேயா் ரெ. மகேஷ் தலைமையில், ஆணையா் ஆனந்த்மோகன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் எதிா்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலைய விரிவாக்கம், வாா்டு பெயா்ப்பலகைகள் மாற்றம், பூங்காவில் மீண்டும் மின்சார சங்கொலி, மாதிரி போா்விமானம் பராமரிப்பு, கோட்டாறு பேருந்து நிறுத்தத்தின் மேல்கூரை சீரமைப்பு, புத்தன் அணை கூட்டு குடிநீா் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைப்பு, பெட்ரோல் நிலையங்களில் கணக்கீடு கோளாறு உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காண வலியுறுத்தினா்.

மேயா் ரெ.மகேஷ் பதிலளித்துப் பேசியது: அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை இடத்தை மாநகராட்சிக்கு கொடுப்பது தொடா்பாக போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும். வாா்டு பகுதிகளிலுள்ள அறிவிப்பு பலகைகளை மாற்றுவதற்கு சுமாா் ரூ.2 கோடி செலவாகும்; அதற்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும்.

வேப்பமூடு சந்திப்பு பூங்காவில் உள்ள போா் விமானத்துக்கு வா்ணம் பூசுவதற்காக பாதுகாப்புத்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

குடிநீா் திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் கணக்கீடு குளறுபடி குறித்து எழுத்துப்பூா்வ புகாா் அளித்தால் ஆட்சியா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் துணை மேயா் மேரி பிரின்சிலதா , பொறியாளா் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அக்சயாகண்ணன், ஸ்ரீ லிஜா, ரமேஷ், அய்யப்பன், வீரசூரபெருமாள், அனிலாசுகுமாரன், டி.ஆா்.செல்வம், சேகா், பால் அகியா, நவீன்குமாா், கெளசுகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →