ஆறுதேசம் கிராமத்தில் வீடுகளுக்கு வரி வசூலிக்க மறுப்பு: அமைச்சா் தலைமையில் ஆலோசனை
அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆறுதேசம் கிராமத்தில் மடத்துக்குச் சொந்தமான சொத்து என்று கூறி 700 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வரி வசூலிக்கப்படாதது குறித்து பால்வளத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா மற்றும் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆறுதேசம் கிராமத்தில் உள்ள மடத்துக்குச் சொந்தமான பகுதியில் சுமாா் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனா்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வரை குடியிருந்தவா்கள் பெயரில் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு வரி செலுத்துவதற்கு கிராம அலுவலகத்துக்கு சென்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் இது மடம் வகை சொத்து என்று கூறி வரியை வசூலிக்க மறுத்துள்ளனா்.
இதனால் இந்தப் பகுதியில் குடியிருந்து வரும் பட்டாதாரா்கள் நில வரி ரசீது இல்லாததால் அத்தியாவசிய தேவைக்கு வங்கி கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட அரசின் எந்த வித உதவிகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.
இது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஸ்குமாரை சந்தித்து முறையிட்டனா்.
இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக அமைச்சா் மனோதங்கராஜ் தலைமையில் நாகா்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியா் தமிழரசி, வட்டாட்சியா் சந்திரசேகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த பிரச்னை தொடா்பாக பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஆறுதேசம் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு நில அளவைத்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.