கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரத் தொடக்கத்தில் பெய்த தொடா் மழையால், பேச்சிப்பாறை அணைக்கு அதிக நீா்வரத்து இருந்தது. அதையடுத்து, அணையின் நீா்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவுமுதல் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே, 2 நாள்களாக மழை சற்று தணிந்து அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது; நீா்மட்டமும் 44 அடியாகக் குறைந்தது. அதன்காரணமாக வெள்ளிக்கிழமை இரவு அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனால், திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து சற்று குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழந்தனா்.