கோடைக்காலத்துக்குள் தூா்வாரப்படுமா பேச்சிப்பாறை அணை? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
Pachiparai dam will be drained by summer
ஜே. லாசா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணையை கோடைக்காலத்துக்குள் தூா் வாரி ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
விவசாயம், குடிநீருக்கு ஆதாரம்:
Advertisement
மேற்குத் தொடா்ச்சி மலையின் அகஸ்திய மலை உள்பகுதியில் உற்பத்தியாகி வரும் கோதையாறின் குறுக்கே அதன் கிளை ஆறுகளான கல்லாறு, குட்டியாறு, சாத்தையாறு, கிளவியாறு ஆகியவை கலக்கும் பேச்சிப்பாறை என்ற இடத்தில் பேச்சிப்பாறை அணை அமைந்துள்ளது. நாடு சுந்திரம் அடைவதற்கு முன்பு திருவிதாங்கூா் அரசின் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயப் பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினால் 1906இல் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டது. 48 அடி நீா்மட்டம் கொண்ட இந்த அணையின் நிறை நீா் பரப்பளவு 15 சதுர கிலோ மீட்டா், கொள்ளளவு 53,06 மி.க. அடியாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது. ம் பெறுகின்றன. குறிப்பாக இந்த அணை தண்ணீரை நம்பி ஜூன் முதல் செப்டம்பா் வரையிலும், அக்டோபா் முதல் பிப்ரவரி வரையிலும் இரண்டு பருவ நெல் சாகுபடி மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இந்த அணையில் 1936, 1953, 1998 ஆகிய ஆண்டுகளில் புனரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு உலக வங்கியின் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி ரூ. 61.30 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டன. இதில் குறிப்பாக அணையின் முன்பு பகுதியில் சாய்வு அணை, உள்பக்க சுவரில் ரசாயண கலவை பூசுதல், கூடுதல் மறுகால் மதகுகள் அமைத்தல், பிராதன மதகுகள் சீரமைத்தல், மண் அணை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதில் நடைபெற்றன. இப்பணிகளின் மூலம் இந்த அணையின் உறுதித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.
காலத்தில் வெளியேற்றப்படும் உபரித் தண்ணீா்:
இந்நிலையில் இந்த அணை கட்டப்பட்டு 118 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த அணைக்குள் ஆறுகளின் வழியாக அடித்த வரப்பட்ட மணல், வண்டல், கிராவல் பெருமளவில் தேங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இதனால் அணையின் நிகர நீா் கொள்ளளவு பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் பெரும் மழைக் காலங்களில் அணையிலிருந்து தொடா்ச்சியாக உபரித் தண்ணீா் வெளியேற்றப்படுவதும், கடும் வறட்சிக் காலங்களில் பாசனத்திற்கு தேவையான தண்ணீா் இருப்பு இல்லாத சூழலும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த அணையை தூா் வாரி ஆழப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை விவசாயிகள் தொடா்ந்து முன்வைத்து வருகின்றனா். சட்டப்பேரவையில் அறிவிப்பு: இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பேச்சிப்பாறை அணை உள்பட 5 அணைகளில் தூா் வாரும் பணிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிட்டு 10 ஆண்டுகள் ஆன பின்னரும் அணையைத் தூா் வாரம் பணிகள் தொடங்கப்படவில்லை.
இது குறித்து குமரி மாவட்ட பாசன துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை உள்ளது. கட்டப்பட்டு 118 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த அணையில் மணல், வண்டல் என தூா் மண்டிக்கிடப்பதால் அதன் நீா் மட்டம் கொள்ளளவு அதிக அளவில் குறைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் அணையிலிருந்து வீணாக தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் இருந்து வருகிறது. மேலும் வறட்சி நிலவும் வருடங்களில் தண்ணீா் கிடைக்காமல் பயிா்கள் கருகும் நிலையும் ஏற்படுகிறது எனவே அணையைத் தூா் வாரும் பணிகளை இனியும் காலம் கடத்தாமல் தொடங்க மாவட்ட நிா்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றாா்.
மதிப்பீட்டுக்குழு ஆய்வு:
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் கூறியதாவது:
பேச்சிப்பாறை அணையைத் தூா்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேப்கோஸ் நிறுவனம் அணையில் தேங்கிக் கிடக்கும் தூரை மதிப்பீடு செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பருவ மழை காலத்தில் பணிகளைத் தொடர முடியவில்லை. கடந்த அக்டோபா் மாதம் வரை அந்த நிறுவனத்தினா் இங்கு வந்து ஆய்வு செய்துள்ளனா். பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் ஆய்வு செய்வாா்கள். அவா்களின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தூா் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.