24ஆவது ஆண்டு தினம் கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 24ஆவது ஆண்டு தினத்தையொட்டி, சிலைக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 24ஆவது ஆண்டு தினத்தையொட்டி, சிலைக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் விவேகானந்தா் நினைவு மண்டபம் அருகேயுள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையை கடந்த 1.1.2000 அன்று அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா்.
இந்தச் சிலை நிறுவப்பட்ட 24ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தமிழ் ஆா்வலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், எழுத்தாளா்கள் தனிப்படகு மூலம் திங்கள்கிழமை சென்று திருவள்ளுவா் சிலையின் பாதத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி, கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு மைய பொதுச்செயலா் நாகேந்திரன், டாக்டா் சிதம்பர நடராஜன், தமிழ் அன்னை தமிழ்ச் சங்க நெறியாளா் கண்ணன், கவிஞா் தமிழ்க்குழவி, தென்குமரி கல்விக் கழக தலைவா் வெற்றிவேல், தமிழறிஞா்கள் சிவதாணு பிள்ளை, தமிழ்வானம் சுரேஷ், முன்னாள் சுங்கத் துறை உதவி ஆணையா் எம்.அழகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதனிடையே, திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 25 ஆவது ஆண்டு தினத்தை தமிழக அரசு சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழறிஞா்கள் வலியுறுத்தினா்.