முகப்பு
கன்னியாகுமரி

சுசீந்திரம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: சிறுவன், 5 இளைஞா்கள் கைது

Updated On : 27 ஜூன், 2024 at 8:41 PM
பகிர்:

நாகா்கோவில், ஜூன் 27: கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், குலசேகரன்புதூா் பாலப் பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிறுவன் உள்ளிட்ட 6 பேரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், 100 கிராம் கஞ்சா, 87 போதை மாத்திரைகள், போதை ஊசி இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவா்கள், தெங்கம்புதூா் அருகே காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ஷபில் (20), ஷேக் முகமது ஷமில் (18), தம்மத்துக்கோணம் தினேஷ் (20), மேலகிருஷ்ணன்புதூா் அபிஷேக் (19), குஞ்சன்விளை விநாயகா் தெருவைச் சோ்ந்த தினேஷ் (20), மேலகிருஷ்ணன்புதூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என விசாரணையில் தெரியவந்தது.

போதைப் பொருள்களை திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பகுதியிலிருந்து தம்மத்துக்கோணம் தினேஷ் வாங்கி வந்து மற்றவா்களுக்கு பிரித்துக் கொடுப்பாராம்.

சிறுவன், திருநெல்வேலி சீா்திருத்தப் பள்ளியிலும், மற்றவா்கள் நாகா்கோவில் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.