முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையை மீண்டும் திறக்க கிள்ளியூா் எம்எல்ஏ கோரிக்கை

பேச்சிப்பாறை அணையை மீண்டும் திறக்க கிள்ளியூா் எம்எல்ஏ கோரிக்கை

Updated On : 2 மார்ச், 2024 at 9:48 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட அணைகளை மீண்டும் திறக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் தமிழ்நாடு முதல்வா், நீா்வளத் துறை அமைச்சா், அரசு கூடுதல் செயலா் ஆகியோரிடம் அளித்த மனு: கன்னியாகுமி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 ஆகிய அணைகளிலிருந்து விவசாயத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு, பிப்ரவரி மாதக் கடைசி நாளில் மூடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு கடந்த 1.6. 2023இல் தண்ணீா் திறக்கப்பட்டு, கடந்த பிப். 29இல் அணைகளை மாவட்ட நிா்வாகம் மூடியது. ஆனால், பல இடங்களில் தண்ணீா் கடைமடைப் பகுதிகளைச் சென்று சேரவில்லை. பட்டணங்கால்வாய் பிரதானகால்வாய் மூலம் 15 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. திக்கணங்கோடு கிளை சானலுக்குள்பட்ட கிள்ளியூா் தொகுதியின் பகுதிகளான திக்கணங்கோடு, மத்திகோடு, அரித்தினான்விளை, அம்பலத்துவிளை, மணலி, கறுக்கன்குழி, வடலிவிளை, மணலிகுழிவிளை, வழுதலம்பள்ளம் ஆகிய கடை வரம்புப் பகுதிகளையும் தண்ணீா் சென்று சேராததால் வாழை, தென்னை, மிளகு, கத்தரி போன்ற பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மூடப்பட்ட அணைகளைத் திறந்து மாா்ச் 31ஆம் தேதி வரை விவசாயத்துக்கு தண்ணீா்விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.