முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் விதிகள் அமல்: ஆட்சியா்

Updated On : 17 மார்ச், 2024 at 12:21 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 9:49 PM

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் தோ்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா். கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைதோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான இடங்கள், பொது சொத்துகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள், தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகள் போன்றவற்றை சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக அகற்ற வேண்டும். சுவா் விளம்பரங்களை அழிக்க வேண்டும். தோ்தலை சுமுகமாக நடத்திட அனைத்துத் துறை அலுவலா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கு.சுகிதா (பொது), செந்தூர்ராஜன் (தோ்தல்), நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கனகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்புலெட்சுமி, உதவிஇயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.