தொடா் மழை: மாா்த்தாண்டம் அருகே மரம் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
கேகேவி16மரம்.
மாா்த்தாண்டம் அருகே சாலையில் சாய்ந்த மரம்.
களியக்காவிளை/ கருங்கல், மே 16:
மாா்த்தாண்டம் அருகே வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மரம் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களியக்காவிளை, மாா்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பின்னா், சாரல் மழை பெய்தது. வானம் தொடா்ந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது.
இந்நிலையில், மாா்த்தாண்டம் - குலசேகரம் சாலையில் கீழ்பம்மம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்ற மரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. கிளைகளை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.
கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை மிதமான மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.