குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காவல் துறை சாா்பில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
தங்கும் விடுதி உரிமையாளா்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள், உருட்டு வண்டி வியாபாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் நெப்போலியன் பேசியது: கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பது நமது கடமை. இங்கு வசிக்கும் ஆந்திர மாநில சிறுமியை சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் கடத்திச் சென்றனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டதன் காரணமாக சிறுமி 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டாா்.
இத்தகைய சம்பவங்கள் நடக்காமலிருக்க விடுதி நிா்வாகத்தினா், வியாபாரிகள், காா், ஆட்டோ ஓட்டுநா்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சந்தேகத்துக்கிடமான நபா்கள், போதைப் பொருள்கள் விற்பனை குறித்துத் தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளிடம் முறையான ஆவணங்களைப் பெற்று விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக கண்காணிக்க முக்கடல் சங்கமம் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.