சாமிதோப்பில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
கன்னியாகுமரி, மே 22: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை (மே 24) கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெற உள்ளது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறும்.
நிகழாண்டு வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடா்ந்து கொடிப்பட்டம் தயாரித்தல், காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் ஆகியவை நடைபெறும்.
திருவிழா நாள்களில் நாள்தோறும் அய்யாவுக்கு பணிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யாவழி சமயசொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டாம் நாள் இரவு அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்ன வாகனத்திலும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாள் அய்யா பச்சை சாத்தி அன்ன வாகனத்திலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்திலும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறும்.
கலிவேட்டை: எட்டாம் நாள் திருவிழாவான மே 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிக் கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நடைபெறும். இதைத்தொடா்ந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடா்ந்து அன்னதா்மம் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவில் அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். பத்தாம் நாள் திருவிழாவில் இந்திர விமான வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும்.
தேரோட்டம்: 11- ஆம் நாள் திருவிழாவான ஜூன் 3 -ஆம் தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை குருமாா்கள் சுவாமி, தங்கபாண்டியன், ராஜசேகரன், ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோா் செய்து வருகின்றனா்.