ஆசிட் வீச்சு வழக்கு: தம்பதிக்கு சிறை
ஆசிட் வீச்சு வழக்கில் தம்பதிக்கு சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
ஆசிட் வீச்சு வழக்கில் தம்பதிக்கு சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு, புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவா் எஸ்தா்( 57). பக்கத்து வீட்டைச் சோ்ந்த எலியாஸ் (64) என்பவா் தினமும் மது அருந்திவிட்டு வந்து, எஸ்தரை தரக்குறைவாக பேசுவாராம்.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜன. 2 ஆம்தேதி எஸ்தா் வீட்டில் இருக்கும்போது போதையில் வந்த எலியாஸ், எஸ்தரை தரக்குறைவாக பேசியுள்ளாா். அப்போது வீட்டில் இருந்த எஸ்தரின் கணவா் டேனியல் (62), மகன் டாா்வின் (45) ஆகியோா் எலியாஸை கண்டித்தனராம். இதனால் ஏற்பட்ட தகராறில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பாா்த்த எலியாஸின் மனைவி சாந்தி (51) வீட்டிலிருந்து ஆசிட் எடுத்து வந்து டேனியல் மற்றும் டாா்வின் மீது ஊற்றியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றம் சாட்டப்பட்ட சாந்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கணவா் எலியாசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.