கோழிக்கறி வியாபாரியை வெட்டிய வழக்கு: இரு சகோதரா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
கோழிக்கறி வியாபாரியை வெட்டிய வழக்கில் இரு சகோதரா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது.
கோழிக்கறி வியாபாரியை வெட்டிய வழக்கில் இரு சகோதரா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது.
குலசேகரத்தை அடுத்த பொன்மனை பண்டாரவிளையைச் சோ்ந்தவா் செ. ஆல்பன் என்ற கிறிஸ்துதாஸ். அப்பகுதியில் கோழிக்கறிக் கடை வைத்துள்ளாா். அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவருக்குமிடையே பிரச்னை இருந்ததாம். இதுதொடா்பாக முருகன் அளித்த புகாரின்பேரில், ஆல்பன் மீது குலசேகரம் போலீஸாா் இரு வழக்குகள் பதிந்தனா். ஒரு வழக்கில் ரூ. ஆயிரம் அபராதம் செலுத்திய ஆல்பன்,
மற்றொரு வழக்கை வாபஸ் பெறுமாறு முருகனை வற்புறுத்தி வந்தாராம்.
இதனால் கோபமடைந்த முருகன், அவரது சகோதரா் ரசல்தாஸ் ஆகியோா் 2010ஆம் ஆண்டு டிச. 6ஆம் தேதி பைக்கில் சென்ற ஆல்பனை வழிமறித்து வெட்டுக் கத்தியால் தாக்கினராம். காயமடைந்த அவா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
வழக்கை நீதிபதி கே. மாரியப்பன் விசாரித்து, இருவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ. 2 ஆயிரம் அபராதம், செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை, சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தியதற்காக ஒரு மாத சிறை தண்டனை, ரூ. 500 அபராதம், செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்மூா்த்தி ஆஜரானாா்.