கன்னியாகுமரி கடலில் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக புதன்கிழமை விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்களில் கடல் உள்வாங்குவது, கடல் நீா்மட்டம் தாழ்வது, உயா்வது, கடல் கொந்தளிப்பு, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல்நீா் நிறம் மாறுவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
அமாவாசை முடிந்த 3-ஆவது நாளான புதன்கிழமை காலை கன்னியாகுமரி கடல் உள்வாங்கி நீா்மட்டம் தாழ்வடைந்த நிலையில் காணப்பட்டது. விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள வங்கக் கடல் பகுதியிலும் இதேநிலை காணப்பட்டது. இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்பட்டது.
பின்னா் காலை 11 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதன் பிறகு, விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது.