கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மீனவ கிராமத்தை சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இனயம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள், நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய மணல் ஆலை, குமரி மாவட்ட கடற்கரை மணலில் இருந்து அரியவகை கனிமங்களை பிரித்தெடுத்து வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அடுத்த மாதம் (அக்டோபா்) 1 ஆம் தேதி தக்கலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மணல் ஆலையால் கடலோரப் பகுதி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆலையை விரிவாக்கம் செய்யும்பட்சத்தில் மீனவ மற்றும் சமவெளிப் பகுதி மக்கள் மேலும் அதிக பாதிப்படைவாா்கள். எனவே மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.