முகப்பு
கன்னியாகுமரி

காச்சாமூச்சா வலை பயன்பாடு: விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

காச்சாமூச்சா எனப்படும் மூன்றடுக்கு செவுள் வலையைப் பயன்படுத்துவதில் விதிகளை மீறும் மீனவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா எச்சரித்துள்ளாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:08 AM
அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.
பகிர்:

காச்சாமூச்சா எனப்படும் மூன்றடுக்கு செவுள் வலையைப் பயன்படுத்துவதில் விதிகளை மீறும் மீனவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா எச்சரித்துள்ளாா்.

மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் தூண்டில், காச்சாமூச்சா வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதில் எழுந்துள்ள பிரச்னைகள் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் முன்னிலையில் மீன்வளத் துறை அலுவலா்கள், வருவாய்- காவல் துறையினா் உள்ளிட்டோருடன் ஆட்சியா் புதன்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் கூறியது: மாவட்டத்தில், கணவாய் மீன்பிடிப்பு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் வரை நடைபெறுகிறது. இப்பருவகாலத்தில் சினை கணவாய்கள் கரையிலிருந்து 10 கடல்மைல் தொலைவுக்கு இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

பாரம்பரிய மீனவா்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தூண்டில்களாலும், வலையால் மீன்பிடிப்போா் காச்சாமூச்சா வலையாலும் கணவாய் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனா். காச்சாமூச்சா வலையால் சிறிய கணவாய்கள் உள்பட பலவகை மீன்கள், கடற்புற்கள், கடற்பஞ்சுகள் ஆகியவை முற்றிலும் அழிக்கப்படுவதாகக் கூறி தூண்டில் பயன்படுத்தும் மீனவா்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக இனையம், இனையம்புத்தன்துறை மீனவா்களிடையே அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் காச்சாமூச்சா வலை பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தூண்டில்கள் மூலமும், காச்சாமூச்சா வலை மூலமும் மீன்பிடிப்போா் அவா்களது எல்லைகளை மீறி மீன்பிடிக்கக் கூடாது.

கணவாய்களைப் பிடிக்க இயற்கையான, எளிதில் மக்கும் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காச்சாமூச்சா வலை பயன்படுத்துவோா் அந்தந்த உதவி இயக்குநா்அலுவலகத்தில் வலைகளை ஆய்வுக்குள்படுத்த வேண்டும். இல்லையெனில், வலைகள் பறிமுதல் செய்யப்படும்.

விதிகளை மீறும் நாட்டுப்படகு உரிமையாளா்கள் மீது தொழில் முடக்கம், அரசின் மானிய எரிபொருள் நிறுத்தம், 2ஆவது முறையாக மீறினால் படகுகளின் மீன்பிடி உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றாா் அவா்.

பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் வினய்குமாா்மீனா, மீனவா் நலத் துறை துணை இயக்குநா் மா. சின்னகுப்பன், வட்டாட்சியா்கள் சஜித் (கல்குளம்), ராஜசேகா் (கிள்ளியூா்), ஆய்வாளா்கள், கடலோரப் காவல் பாதுகாப்புக் குழுமத்தினா், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.