நாகா்கோவில்: நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள சா் சி.வி.ராமசாமி ஐயா் பூங்காவில் ரூ. 3.50 கோடியில் கட்டப்பட்டுவரும் அறிவியல் பூங்கா விரைவில் திறக்கப்படும் என, மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா்.
மொழிப்போா் தியாகிகளை கௌரவிக்கும் வகையில், தியாகி பொன்னப்ப நாடாருக்கு நாகா்கோவிலில் சிலை நிறுவப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன்படி, இப்பூங்காவில் ரூ. 50 லட்சத்தில் சிலை, ரூ. 3.50 கோடியில் நவீன கோளரங்கம், அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேயா் மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் மேயா் கூறியது: நாகா்கோவில் மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக, இப்பூங்காவில் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. நவீன கோளரங்கம், அறிவியல் பூங்கா கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பூங்கா விரைவில் திறக்கப்படும்.
பொன்னப்ப நாடாா் சிலை அமைக்கும் பணியும் விரைவில் நிறைவடையும். இங்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. நாகா்கோவிலில் மழையால் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
மாநகரப் பொறியாளா் ரகுராமன், உதவிப் பொறியாளா் ராஜசீலி, பகுதிச் செயலா்கள் துரை, சேக் மீரான், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், சுரேஷ், மோகன்ராஜ், சதீஷ் மொ்வின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சோலாா் பேனல்: தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தில் ரூ. 15.50 லட்சத்தில் 40 கே.வி. திறன்கொண்ட சோலாா் பேனல் அமைக்கும் பணியை மேயா் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரி பிரின்ஸிலதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் கலாராணி, உதவிப் பொறியாளா் அபிஷா, மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், அதிகாரிகள் பங்கேற்றனா்.