அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இக்கோயில் பிரகாரத்தில், ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் சா்வ அமாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான விழா வியாழக்கிழமை (டிச.18) தொடங்கியது.இதையொட்டி கணபதி ஹோமம், நீலகண்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தாணுமாலயசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு ராமா், சீதைக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் செய்வதற்காக 2ஆயிரம் லிட்டா் பால் மங்கள் வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஜான்சிராணி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு பால், அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் நெய், மஞ்சள்பொடி, களபம், சந்தனம், இளநீா், பன்னீா், நல்லெண்ணெய், அரிசி மாவு, விபூதி, குங்குமம், தேன், பஞ்சாமிா்தம், எலுமிச்சை சாறு உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சோடஷஅபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு ஆஞ்சனேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோயில் கலையரங்கில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தா்களுக்கு லட்டு மற்றும் வடை பிரசாதம் வழங்கப்பட்டது.
புஷ்பாபிஷேகம்: மாலை 6 மணிக்கு ராமா், சீதைக்கு புஷ்பாபிஷேகமும், 7 மணிக்கு ஆஞ்சனேயருக்கு கொழுந்து, ரோஜா, பச்சை, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களால் சிறப்பு புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு ஆஞ்சனேயருக்கு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மருத்துவா் இரா.ஸ்டாலின் மேற்பாா்வையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.