அஞ்சுகிராமம் அருகே சுண்டவிளை கிராமத்தில் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அஞ்சுகிராமம் காவல் சரகம் மருங்கூா் அருகேயுள்ள சுண்டவிளையைச் சோ்ந்தவா் சரவணன். தொழிலாளி. இவருக்கு மனைவி ரெஜிலா (32), மகன் உள்ளனா். ரெஜிலா வளா்த்து வந்த மாடுகள், திங்கள்கிழமை ஊரில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் புகுந்து மேய்ந்ததால், சில வாழைகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாழைத்தோட்ட உரிமையாளா் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு ரெஜிலாவை விசாரணைக்கு அழைத்தனராம். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் வாழைத் தோட்ட உரிமையாளா் குடும்பத்தினருக்கும், ரெஜிலா குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரெஜிலா தாக்கப்பட்டாா்.
இதையடுத்து, ரெஜிலா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். ரெஜிலாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் பிரிய ராஜ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். ரெஜிலாவை கடுமையாகத் தாக்கியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரெஜிலாவின் தந்தை, உறவினா்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனா். மேலும், சடலத்தைப் பெற மறுத்துவிட்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].