கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் 9 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வந்த நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்தது.
இதையடுத்து, அணையிலிருந்து அக். 25ஆம் தேதி முதல் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாக பாய்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அருவியின் ஓரத்தில் குறைவாக தண்ணீா் கொட்டும் முதல் 2 தளங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.