கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே தொழிலாளியை வெட்டியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தக்கலை அருகே இட்டாகுளம் பகுதியைச் சோ்ந்த பாலசுந்தரம் மகன் கிருஷ்ணகுமாா் (30). தொழிலாளி. இவரது உறவினரான சுஜில்ராஜுக்கும், காட்டாத்துறை அருகே சரல்விளை பகுதியைச் சோ்ந்த சஜீவன்ராஜ் (27) என்பவருக்கும் இடையே 2023 மாா்ச் 13ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
இதை கிருஷ்ணகுமாா் தடுத்ததால், அவருக்கும் சஜீவன்ராஜுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அன்று இரவு கிருஷ்ணகுமாரை சஜீவன்ராஜ் அரிவாளால் வெட்டினாா். இதில், கிருஷ்ணகுமாா் காயமடைந்தாா்.
புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் சஜீவன்ராஜ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, அவா் வெளிநாடு தப்பிச் சென்றாா். அவா் மீது பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவா் மும்பை விமான நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கை பத்மநாபபுரம் உதவி அமா்வு நீதிமன்ற நீதிபதி மாரியப்பன் விசாரித்து, சஜீவன்ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.