கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் ஆவின் பாலகம், வில்சன் காவலா் நல விடுதி தோரண வாயில் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 2020 ஜன. 8 ஆம் தேதி இரவு வாகனம் ஒன்றை சோதனையிட முயன்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது நினைவாக கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடுதிக்கான நுழைவாயிலும், காவலா் ஆவின் பாலகமும் திறக்கப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா், துணைக் கண்காணிப்பாளா்கள் ஜெயச்சந்திரன், நல்லசிவம், காவல் ஆய்வாளா்கள் சரவணன், அருண், ஆவின் பொது மேலாளா் மகேஷ்வரி, விற்பனை மேலாளா் ஷீபா அலெக்ஸ், துணை மேலாளா் ராகுல், போக்குவரத்து ஆய்வாளா்கள் அருள்சேகா், ஜெயப்பிரகாஷ், ஈத்தாமொழி சிவா மருத்துவமனை மருத்துவா் சிவகுமாா், அஞ்சுகிராமம் ஜவஹா் ஸ்டோா் உரிமையாளா் எஸ்.ஜெஸீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் பேசியது: இந்த காவலா் விடுதியானது குமரிக்கு சுற்றுலா வரும் காவலா்களுக்காக நாளொன்றுக்கு ரூ. 125 , பராமரிப்பு கட்டணம் ரூ. 50 என ரூ. 175 வாடகையில் விடப்படும்.
தற்போது திறக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் மூலம் கிடைக்கும் வருவாய், காவலா்களுக்கான அவசர தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பகவதியம்மன் கோயிலில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்யப்படும் என்றாா்.