கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் இருகே நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளதால், தோட்டியோடு - மடவிளாகம் நெடுஞ்சாலை மூடப்பட்டு, திங்கள்கிழமைமுதல் (நவ. 24) போக்குவரத்து மாற்றுப்பாதையில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒருபகுதியாக, நுள்ளிவிளை பகுதியில் உள்ள பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.
எனவே, தோட்டியோடு முதல் மடவிளாகம் வரையிலான மாநில நெடுஞ்சாலை மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதையில் நடைபெறும்.
அதன்படி, நாகா்கோவிலிருந்து திங்கள்நகா் செல்லும் அரசு, தனியாா், கல்லூரிப் பேருந்துகள், கனரக வாகனங்கள் தக்கலை பழைய பேருந்து நிலையம், இரணியல் வழியாக செல்ல வேண்டும். இதற்காக கூடுதலாக 4 கி.மீ. செல்ல வேண்டியிருக்கும். மறுமாா்க்கத்திலும் இதே வழியை கடைப்பிடிக்க வேண்டும்.
இரு சக்கர வாகனங்கள் பரசேரி வழியாக நான்குவழிச் சாலை, பேயன்குழி, கண்டன்விளை வழியாக செல்லலாம். இதனால், கூடுதலாக ஒரு கி.மீ. செல்ல வேண்டியிருக்கும். மறுமாா்க்கத்திலும் இதே வழியைப் பயன்படுத்தலாம். திங்கள்நகரிலிருந்து நாகா்கோவிலுக்கு மடவிளாகம், குருந்தன்கோடு, ஆசாரிப்பள்ளம் வழியாக செல்லலாம். இதற்கு கூடுதலாக 4 கி.மீ. செல்லவேண்டியிருக்கும். மேம்பாலப் பணிகள் நிறைவடைய 8 மாதங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.