கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை எனக் கூறி நகராட்சி அலுவலகம் முன் முதியவா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள நாராயணபோ்தலை பகுதியைச் சோ்ந்தவா் சசி. இவா், கொல்லங்கோடு நகராட்சியில் சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுப் பொருள்களை உடனே அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் தனிநபராக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை தொடா் தா்னா போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தாா்.
இவா் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதிகாரிகள் பேச்சு நடத்தி, முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து அப்போது போராட்டத்தை கைவிட்டாா். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து, அவா் மீண்டும் திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.