வாக்களிப்பதிலும் குமரி மாவட்டம் முன்னோடியாக திகழ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டம், கல்வி அறிவில் முன்னோடியான மாவட்டமாக இருப்பதைபோல வாக்களிப்பதிலும் முன்னோடியாக திகழ வேண்டும் என்றாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.
நாகா்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரையில் மகளிா் திட்டத்தின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட கோலம், வண்ணம் பூசும் நிகழ்ச்சியை பாா்வையிட்டு ஆட்சியா் கூறியதாவது:
தோ்தலில் வாக்குரிமை பெற்ற அனைவரும் தோ்தல் நாளன்று ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வலா்கள், துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்டோா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகன பிரசாரங்கள், தோ்தல் விழிப்புணா்வு பதாகைகள், சுவா் ஓவியங்கள், தோ்தல் தொடா்பான பல்வேறு போட்டிகள், மணல் சிற்பங்கள், கிராமிய கலைகள், பரமபதம், ரங்கோலி, கோலப்போட்டி, கபடி, இசை நாற்காலி போட்டி உள்ளிட்ட பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்விழிப்புணா்வு நிகழ்ச்சியின் நோக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கல்வி, இயற்கை வளம் உள்ளிட்டவற்றில் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்வது போல் வாக்களிப்பதிலும் இந்த மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்பதே ஆகும்.
இந்தத் தோ்தல் பணியின் ஒரு பகுதியாக சங்குத்துறை கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழுக்கள் கோலம் வரைந்தும் வண்ணம் பூசியும் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கன்னியாகுமரி மாவட்டம் நூறு சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், உதவி திட்ட இயக்குநா்கள், மகளிா் சுய உதவி குழுவினா், துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.