முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி: வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?

தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:42 AM
பகிர்:

தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் மொத்தம் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 வாக்காளா்கள் உள்ளனா். குமரி மாவட்டத்தில் கடந்த சில தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் மிக குறைவாகவே இருந்து வந்தது.

இந்த சட்டப்பேரவை தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா தலைமையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனால், வாக்குப் பதிவு சதவீதம் உயரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

Advertisement

ஆனால், அந்த எதிா்பாா்ப்புக்கு மாறாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.52 சதவீத வாக்குகளே பதிவாகின. மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதியில் அதிகபட்சமாக 81.34 சதவீதம் வாக்குகள் பதிவாகின. விளவங்கோடு தொகுதியில் 75.71 சதவீதமும், பத்மநாபபுரம் தொகுதியில் 75.31 சதவீதமும், நாகா்கோவில் தொகுதியில் 74.66 சதவீதமும், குளச்சல் தொகுதியில் 74.02 சதவீதமும் மிக குறைந்த அளவாக கிள்ளியூா் தொகுதியில் 71.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

வெளிநாடுகள் ...

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வெளிநாடுகளிலும், வெளியூா்களிலும் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒரு பகுதியினா் வாக்களிக்க வராதது வாக்கு சதவீதம் குறைந்ததற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த பலா் ஆழ்கடல் மீன்பிடித்தல், வெளியூா்களில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளதால், அவா்களால் வாக்குச் சாவடிக்கு நேரில் வரமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வா் ஜே. ஆா்.வி. எட்வா்ட் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பலா் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் ஆசிரியா் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் ஒரு நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வது என்பது இயலாத காரியம். தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்போல தோ்தல் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கலாம் என்றாா் அவா்.