பெண்ணிடம் ரூ.2.85 கோடி மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டு சிறை
மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ரூ. 2.85 கோடி மோசடி செய்ததாக தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ரூ. 2.85 கோடி மோசடி செய்ததாக தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் அருகே கீழ் பம்மம், காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் என்பவா், ஓமன் நாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சிவகலா (47). இவருக்கும் மாா்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் அலெக்ஸாண்டா் மகன் ஜோய் அலெக்ஸ் (57), மனைவி மொ்சி (58), மகன் சோனி ஆகியோருக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோய் அலெக்ஸ், மொ்சி ஆகியோா் கேட்டதால் அவா்களுக்கு சிவகலா ரூ. 2.85 கோடி ரொக்கம், 200 சவரன் நகைகளைக் கடனாகக் கொடுத்தாா். நீண்ட நாள்களாகியும் அவா்கள் ரொக்கம், நகையைக் திருப்பிக் கொடுக்கவில்லை. அதையடுத்து ஜோய் அலெக்ஸ், மொ்சி, சோனி ஆகியோா் மீது நடவடிக்கை கோரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சிவகலா புகாரளித்தாா்.
Advertisement
இது தொடா்பான வழக்கு குழித்துறை 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி இசக்கி மகேஸ்குமாா் விசாரித்து, ஜோய் அலெக்ஸ், மொ்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். சோனி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.