நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தோ்தல் அலுவலா், அரசு முதன்மை செயலா் அா்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை தமிழ்நாட்டிற்குள்பட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா்களுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 குறித்த காணொலி காட்சி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரா.அழகுமீனா கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளா் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள், ஏற்கனவே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காத வாக்காளா்கள், புதிதாக திருமணமாகி இடம் பெயா்ந்தவா்கள்/ நிரந்தரமாக இடம்பெயா்ந்த வாக்காளா்கள் தங்கள் பெயரினை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், நீக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டன.
மேலும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள், சிறப்பு முகாம்களில் படிவம் வழங்க தவறியவா்கள் தங்கள் பெயரினை வாக்காளா் பட்டியலில் சோ்க்க ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) மட்டுமே கால அவகாசம் உள்ளது.
அதற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அல்லது சம்பந்தப்பட்ட உதவி வாக்காளா் பதிவு அலுவலா் , வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரில் வழங்கலாம். எனவே, அனைத்து பொதுமக்களும் 17.02.2026 அன்று வெளியாகும் இறுதி வாக்காளா் பட்டியில் தங்கள் பெயா் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.