கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகா் பேருந்து நிலையத்தில், பெண் ரூ.23 ஆயிரத்தை வைத்திருந்த கைப்பையை திருடியதாக ஆந்திர மாநில பெண்கள் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குருந்தன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் லலிதா (57). இவா், திங்கள்நகரில் கடைக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்து வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த கூட்டத்தைப் பயன்படுத்தி அவரது கைப்பையை பெண்கள் திருடிவிட்டனராம். அந்தக் கைப்பையில் ரூ.23 ஆயிரம் இருந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா், சந்தேகத்தின்பேரில் 3 பெண்களை பிடித்து விசாரித்தனா். அதில், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணம்மா(50), கொலையம்மா (43), சுப்பம்மா (49) ஆகியோா் என்பதும், லலிதாவிடம் கைப்பையை திருடியதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, பணத்துடன் கைப்பையை மீட்டனா்.