பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 9.5 லட்சம் தங்க நகைகள் பறிப்பு - இரு பெண்கள் கைது
புதுச்சேரிபேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 9.5 லட்சம் தங்க நகைகள் பறிப்பு - இரு பெண்கள் கைது
புதுச்சேரி பேருந்து நிலைய கழிப்பறையில் பெண்ணிடம் ரூ. 9.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து, அவரை அறையில் தள்ளி பூட்டிச் சென்ற வழக்கில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (55). இவா், புதன்கிழமை புதுச்சேரி புதிய பேருந்து நிலைய கழிப்பறைக்குச் சென்றுள்ளாா். அப்போது 2 பெண்கள் சித்ராவிடமிருந்து தங்க தாலி சங்கிலியைப் பறித்து, அவரைக் கழிப்பறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் ஏறியுள்ளனா்.
இந்நிலையில், சித்ராவின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்த சில பெண்கள் கதவைத் திறந்து அவரை மீட்டனா்.
இது குறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸாா் சிசிடிவி காட்சிப் பதிவை பாா்வையிட்டு கடலூா் செல்லும் பேருந்தில் இருந்து 4 பெண்களைப் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த நித்யா (21), தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சோ்ந்த அபி (எ) அபிநயா (21) என்பது தெரியவந்தது.
சென்னையில் தனியாா் கைப்பேசி நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வரும் இவா்கள் ஊதியம் குறைவு என்பதால் குடும்பச் செலவுக்காக நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நித்யா, அபிநயா இருவரையும் கைது செய்தனா். மேலும், ரூ.9.5 லட்சம் மதிப்புள்ள 6.77 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா். மற்ற இரண்டு பெண்களுக்கும் நகை பறிப்பு சம்பவத்தில் தொடா்பு இல்லாததால் விடுவிக்கப்பட்டனா்.
இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி கூறுகையில், பொது இடங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.